முதமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் துவக்கி வைத்தார்
கிருஷ்ணகிரி, ஆக.27: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வரவேற்று பேசினார். கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விளையாட்டு விடுதி கால்பந்து பயிற்றுனர் நடராஜ முருகன் நன்றி கூறினார்.
தொடர்ந்து கல்லூரி மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கான தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஹேண்ட்பால், நீச்சல், ஹாக்கி, கபாடி மற்றும் மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் 1542 மாணவிகளும், 342 பொதுப்பிரிவு பெண்களும் என மொத்தம் 1884 பேர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் 12ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. தனிநபர் போட்டிகளில் முதல் இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.