கழிவுகளை சேகரிக்க பிரத்யேக இடம்
கிருஷ்ணகிரி, நவ.25: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் அலுவலகங்களில் கழிவுகளை சேகரிப்பதற்கான இடத்தை கலெக்டர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகிதக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பல்வகையான கழிவுகளை சேகரிப்பதற்கான பிரத்யேக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட அலுவலக கழிவு பொருட்களை. முறையாக தரம் பிரித்து உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு. மீள் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்யப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள். இத்திட்டத்தின் மூலம் தங்களது அலுவலகங்களில் உள்ள கழிவுப் பொருட்களை கழிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், எனது குப்பை எனது பொறுப்பு என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி திட்ட அலுவலர்கள் ரமேஷ்குமார், சென்னகிருஷ்ணன், தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.