மல்லிகைப்பூக்கள் விலை அதிகரிப்பு
காவேரிப்பட்டணம், நவ.25: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், திம்மாபுரம், டேம்ரோடு, அவதானப்பட்டி, மலையாண்டஹள்ளி, போத்தாபுரம், ஜெகதாப், பெண்ணேஸ்வர மடம், நரிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 6 ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பூக்களை கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ள நிலையில், தினமும், 50 டன் அளவிற்கு அறுவடை செய்யப்படுகிறது. காலை நேரத்தில் அறுவடை செய்யும் பூக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், தற்போது ஒரு கிலோ ரூ.1000 வரை விற்பனையாகிறது.
தற்போது பனிக்காலம் தொடங்கி, பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகி வருகிறது. இதனால், பூக்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து இருபோக நெல் சாகுபடிக்கு போதிய அளவு நீர் இருந்தும், நெல் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காததால், பணப்பயிரான மல்லிகை சாகுபடிக்கு அதிகளவு விவசாயிகள் மாறியுள்ளனர். பண்டிகை காலங்களில் ஒரு கிலோ ரூ.2500 வரை விற்பனை ஆகிறது. காலையில் அறுவடை செய்யும் மல்லிகை பூக்கள் விமானம் மூலம் அனுப்பபட்டு டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டிற்கும், வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் அன்று மாலையே விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் மாலையில் அறுவடை செய்யும் பூக்களை, ரூ.100 முதல், 150 வரை மட்டுமே வாங்குவதால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக காலையில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மல்லிகைப்பூ அறுவடை மற்றும் விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் மல்லிகைப்பூக்களை விற்பனை செய்ய முடியாமலும், போதிய விலை கிடைக்காமலும் கவலையில் உள்ளனர். எனவே, பூக்களை சேமித்து வைக்க அரசு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் எனவும், நறுமண தொழிற்சாலை அமைக்கவும், மல்லிகை பூக்களை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.