அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி, அக். 23: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(54). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரியில் இருந்து பர்கூருக்கு சென்ற பஸ்சில், நேற்று கோவிந்தராஜ் பணியில் இருந்தார். அப்போது, மதுபோதையில் பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினர். அவர்கள் பஸ் நிலையத்திற்கு பஸ் சென்ற பிறகும், இறங்காமல் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களை இறங்கி செல்லும்படி கோவிந்தராஜ் கூறியுள்ளார். அப்போது, அவர்கள் தகராறு செய்து, கோவிந்தராஜின் முகத்தில் தாக்கினர். இதில் அவர்கள் அணிந்திருந்த மோதிரம் கோவிந்தராஜின் முகத்தில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை மதுபோதையில் தாக்கிய பர்கூர் ஜெகதேவியை சேர்ந்த அபிஷேக்(22), கொத்தூர் யஷ்வந்த் ராஜ்(21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.