ராகி, முட்டைகோஸ் வயலை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை, அக். 23: தேன்கனிக்கோட்டை அருகே, முட்டைகோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில் 5 யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, கொத்தூர் தாவர கேரட்டி, ஏணிமுச்சந்திரம், ஆலஹள்ளி, காரண்டப்பள்ளி, மலசோனை உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, சாப்பரப்பள்ளி கிராமம், லட்சுமணன் என்பவரது தோட்டத்தில் புகுந்து முட்டைகோஸ் தோட்டத்தை நாசம் செய்து சென்றுள்ளன. மேலும் சொட்டு நீர்ப்பாசன கருவி பிவிசி பைப்களை உடைத்துள்ளது. அதே போல், அருகில் உள்ள ராகி வயலில் புகுந்து பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகியுள்ளது. சொட்டு நீர்ப்பாசன பைப்புகளை உடைத்து நாசம் செய்வதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமங்களுக்குள் யானைகள் வராதவாறு, நிரந்தர தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.