பாரூர் ஏரி பகுதியில் சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
போச்சம்பள்ளி, நவ.22: போச்சம்பள்ளி தாலுகா, பாரூரில் உள்ள பெரிய ஏரியால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பாரூரில் இருந்து கீழ்குப்பம் வழியாக போச்சம்பள்ளி, தர்மபுரி, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் பாரூர் பெரிய ஏரி அடிவாரத்தில் விவசாய நிலத்தினை ஒட்டியவாறு மின்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின்கம்பம் கடந்த சில மாதங்களாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக செல்வோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வந்தனர். தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்துள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கடந்த 7ம் தேதி “தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய துறையினர் நேற்று சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தனர்.