ஆம்னி பஸ்சில் கஞ்சா கடத்திய 2 ேபர் கைது
ஓசூர், செப்.22: பெங்களூருவிலிருந்து, ஓசூர் வழியாக கோவைக்கு ஆம்னி பஸ்சில் 8 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் சிப்காட் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும் படியாக இருந்த வாலிபர்களின் பையை சோதனை செய்தனர், அதில் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த களிப்படா மண்டல் (22), மதன் மண்டல் (31) என்பது தெரிய வந்தது. இருவரும் கோவைக்கு கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்து. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.