மொச்சை அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ராயக்கோட்டை, ஆக.13: ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மொச்சை அவரை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். செழித்து வளர்ந்த செடிகளில் பூக்கள் பூத்துள்ளதை அடுத்து பந்தல் அமைக்க குச்சி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்னளர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நேரடியாகவும், பசுமை குடில் அமைத்தும், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர்பாசம். மல்சிங் சீட் அமைத்தும் தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டை கோஸ், காளிபிளவர், அவரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி என அனைத்து வகையான காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். ராயக்கோட்டையில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, ஓசூருக்கு அடுத்தபடியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப, பெங்களூரு வியபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட விற்பனைக்காகவும் காய்கறிகள், கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஒன்றுரை மாதத்துக்கு முன்பாக ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் மொச்சை அவரை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த செடிகள் தொடர் மழைக்கு செழித்து வளர்ந்து பூக்கள் பிடித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் பந்தல் அமைக்க குச்சி கட்டும் பணியி்ல ஈடுபட்டுள்ளனர். தற்போது உழவர் சந்தைகள், வாரச்சந்தை மற்றும் காய்கறி கடைகளில் மொச்சை கிலோ ரூ.80க்கும், அவரைக்காய் கிலோ ரூ.70க்கும், பட்ட அவரை ரூ.60க்கும், டபுள் பட்டர் பீன்ஸ் ரூ.200 வரையிலும் விற்பனையாகிறது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் அவரை சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.