சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் பீதி
தேன்கனிக்கோட்டை, ஆக.12: ஜவளகிரி அருகே நேற்று காலை சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்ததால், கிராம மக்கள் பீதியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. அதில் சில யானைகள் காட்டை விட்டு வெளியே வந்து, தினமும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை நாசம் செய்கின்றன. நேற்று காலை, தளி அருகே உள்ள ஜவளகிரி - கொலகொண்டப்பள்ளி செல்லும் சாலையில், அந்த பகுதியில் உள்ள சோலார் மின்வேலியை உடைத்துக் கொண்டு, வனத்தை விட்டு வெளியே வந்த ஆண் ஒற்றை யானை சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. இதைப் பார்த்து சாலையில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பட்டாசு வெடித்து, ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை, அங்கும், இங்கும் சுற்றிய பின்னர், வனச்சரக சோதனை சாவடி அருகே சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர், பட்டாசு வெடித்து காட்டிற்குள் ஒற்றை யானையை விரட்டியடித்தனர். தொடர் அட்டகாசம் செய்யும் யானையை, வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.