93 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ஓசூர், ஆக.12: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ஆகியோர் என மொத்தம் 93 ஆயிரம் நபர்களுக்கு, தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 42 பள்ளி கூடங்கள் உட்பட 115 கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. காமராஜ் காலனியில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் சத்யா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், மாநகர நல அலுவலர், மருத்துவ பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.