அரசு பள்ளி சமையல் கூடத்தில் 2 காஸ் சிலிண்டர்கள் திருட்டு
போச்சம்பள்ளி, ஆக.7: போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, பள்ளி வளாகத்தில் சமையல் கூடத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கு உணவு சமைக்க வைத்திருந்த 2 காஸ் சிலிண்டர்களை திருடிச் சென்றுவிட்டனர். நேற்று காலை உணவு சமைக்க வந்த சமையலர், சமையல் அறையில் பூட்டு உடைக்கப்பட்டு, 2 காஸ் சிலிண்டர்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழிக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஸ் சிலிண்டர்கள் திருட்டு போனதால், குழந்தைகளுக்கு காலை உணவு சமைக்க தாமதம் ஏற்பட்டது. பின்னர், மாற்று சிலிண்டரை வாங்கி கொடுத்த பிறகு சமைத்து, குழந்தைகளுக்கு காலை உணவு தாமதமாக வழங்கப்பட்டது.