பைக் மீது லாரி மோதி பெங்களூரு வாலிபர் பலி
போச்சம்பள்ளி, ஆக.7: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஹர்ஷித்(27). இவரது மனைவி ரீனு (27). இவர்கள் இருவரும், நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு பைக்கில் புறப்பட்டனர். அதிகாலை 3.20 மணியளவில், மத்தூர் அருகேயுள்ள கண்ணண்டஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினிலாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹர்ஷித் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ரீனுவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த மத்தூர் போலீசார் சடலமாக கிடந்த ஹர்ஷித்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரீனுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.