மாரியம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா
ராயக்கோட்டை, ஆக.6: ராயக்கோட்டை தோட்டம், சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோயிலில் 11ம் ஆண்டு குண்டம் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 1ம்தேதி கங்கனம் கட்டும் நிகழ்ச்சியும், 3ம்தேதி சக்தி அழைத்தல், 4ம்தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச பூஜை, ஹோமம் நடைபெற்றது. நேற்று கோயில் முன்பாக அக்னி குண்டம் அமைத்து, அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து கிடா பலியிட்டனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் சிலைகளை தூக்கிக் கொண்டு பூசாரி தீ மிதித்தார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள், தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக, திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊரவலமாக கோயிலுக்கு வந்தனர். ேகாயிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வரும் 17ம்தேதி, கன்று விடும் திருவிழா நடைபெறுகிறது.