பராமரிப்பின்றி காணப்படும் ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட்
ராயக்கோட்டை, ஆக.5: ராயக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் கடந்த 2011ம் ஆண்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. மழைக்காலங்களில் நீர் செல்ல வழியில்லாததால் பஸ் ஸ்டாண்டில் தேங்கி நிற்கிறது. சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தினர், மண்ணைக் கொண்டு வந்து குழிகளில் கொட்டி மூடுவதால், மீண்டும் அதில் வாகனங்கள் செல்லும் போது, மண் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் குழியாகி விடுகிறது. எனவே, குழிகளை சிமெண்ட் மற்றும் ஜல்லி கலந்த கலவை மூலம் மூடி சீரமைத்து, பஸ் நிலையத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.