ராகி பயிரை சேதம் செய்த யானைகள்
ஓசூர், டிச.4: ஓசூர் அருகே சானமாவு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம், ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியையொட்டி டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தாயராக இருந்த ராகி பயிர்களை சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த ஓசூர் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் யானைகளை சானமாவு மற்றும் ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.