தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டிருந்த 2 யானைகள் காட்டிற்குள் விரட்டியடிப்பு: விவசாயிகள் நிம்மதி
தேன்கனிக்கோட்டை, அக்.26: தேன்கனிக்கோட்டை அருகே தடிகல் பகுதியில் முகாமிட்டிருந்த 2 காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, லக்கசந்திரம், மாரச்சந்திரம், தாவரக்கரை, அயன் பூரிதொட்டி, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், வாழை, நெல் பயிர்களை துவம்சம் செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் மாரசந்திரம் பகுதியில் முகாமிட்டிருந்தன. அங்கு ராகி, தாக்காளி, முட்டைக்கோஸ் பயிர்களை நாசம் செய்தன.
மேலும், கூட்டத்திலிருந்து பிரிந்த 4 வயது குட்டி யானை ஒன்று மாரச்சந்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே 2 நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று குட்டியை காட்டிற்குள் விரட்டி யானை கூட்டத்தில் சேர்த்தனர். இந்நிலையில், மாரசந்திரம் பகுதியில் முகாமிட்டிருந்த 2 யானைகள் தடிக்கல் திப்பசந்திரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இடம்பெயர்ந்து சென்றன. இதனை அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தடிக்கல் அணை பகுதியில் முகாமிட்டிருந்த 2 யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டியடித்தனர். இதனால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். தொடர் மழையால் ராகி பயிர் செழித்து வளர்ந்து பால் கதிர் பிடித்துள்ள நிலையில் யானை கூட்டம் ராகி பியர்களை நோக்கி நகர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு யானைகளை அடர்ந்த காட்டிற்குள் விரட்டியடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.