2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேன்கனிக்கோட்டை, நவ.15: தேன்கனிக்கோட்டையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக 2வது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட பகுதியாக உள்ளது. நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி குடியிருப்புகள், கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டி வருகின்றனர். தாலுகா தலைமையிடமாக உள்ளதால் சுற்றியுள்ள 850க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாட தேவைகளுக்காக தேன்கனிக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஓசூர் மெயின் ரோடு, நோதாஜி ரோடு, அஞ்செட்டி ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து டீக்கடை, தள்ளுவண்டி கடை, கபாப் கடைகள் அமைத்துள்ளதால், நடைபாதை முழுவதுமாக இல்லாமல் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் வரும்போது, ஒதுங்கும் டூவீலர்களால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். நகரில் பஸ் நிலையம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால், நாள் முழுவதும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, கோட்டை வாசல் முதல் அஞ்செட்டி சாலையில் காவல் நிலையம் வரை சாலை வரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையொட்டி, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருலோகசந்தர் ஆலோசனையின்படி, தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் கவிதா தலைமையில், உதவி பொறியாளர் நந்தகுமார், சாலை ஆய்வாளர் முருகேசன் மற்றும் சாலை பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். 2வது நாளாக நேற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர், பேரூராட்சி அலுவலத்தில் இருந்து, பஸ் நிலையம், ஓசூர் ரோடு, சந்தைப்பேட்டை, கோட்டை வாசல் வரை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.