வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சுற்றிவளைப்பு
கிருஷ்ணகிரி, நவ.11: ராயக்கோட்டை அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே அலேசீபம் கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). விவசாயி. இவரது தாய் சாரதா. நேற்று முன்தினம் காலை வீட்டில் சாரதா மட்டும் இருந்துள்ளார். கதவை திறந்து வைத்து விட்டு சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் உள்ள மற்றொரு அறையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அந்த அறைக்கு சென்று பார்த்தபோது, மர்மநபர் பீரோவில் இருந்த பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டு சாரதா திடுக்கிட்டார். அந்த மர்மநபர் சாரதாவை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே, திருடன் திருடன் என சாரதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த நபரை துரத்தி சென்றனர்.
அப்போது, அந்த நபர் கால் தடுக்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அலேசீபம் பகுதியைச் சேர்ந்த திம்மராயன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கீழே தவறி விழுந்ததில் படுகாயமடைந்த அவரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், திம்மராயன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, இதுபோன்று வேறு எங்கேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.