சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி
ஓசூர், செப்.2: ஓசூர் அருகே, சாலை தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிமீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டிற்கு மேலாக நடந்து வருகிறது. இதனால், இருபுறங்களிலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூரிலிருந்து நேற்று கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் நின்றது. இதனால், அவ்வழியாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 5 கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இaதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘கோபசந்திரம் பகுதியில், மேம்பால பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றனர்.