இரவை பகலாக்க தோட்டத்தில் எல்இடி பல்புகள் பயன்பாடு
ராயக்கோட்டை, ஆக.19: ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் மகசூல் அதிகரிக்க, இரவை பகலாக்க தங்களது தோட்டங்களில் இரவு நேரங்களில் எல்இடி பல்புகளை எரிய விடுகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் ஊட்டிக்கு இணையான சீதோஷ்ணநிலை நிலவுவதால், காய்கறிகள், மலர்கள் போன்றவை தரமான விளைச்சலை தருகின்றன. அதுவே மகசூல் அதிகரிக்கவும், பகலைப்போல இரவிலும் வளர்ச்சி அதிகரிக்க, இரவை பகலாக்க எல்இடி பல்புகளை தங்களது தோட்டங்களில் விவசாயிகள் எரிய விடுகின்றனர். அதனால் மலர் செடிகள் போன்றவை அதிக வளர்ச்சியடைவதால், சாதாரணமாக மலர்கள் மொக்கு விடுவதைக்காட்டிலும், அதிக அளவில் மொக்கு விடுவதால் நிறைய பூக்களை விடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இரவில் மலர் செடிகளின் மீது பனித்துளிகள் விழுந்தாலும், வளர்ச்சி பாதிக்காமல் இருக்க, எல்இடி பல்பின் வெளிச்சம் தடுப்பதாக கூறுகின்றனர். ராயக்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில், எல்இடி பல்புகளை இரவில் தோட்டத்தில் எரிய விடுகின்றனர். அதற்கு ஒரு ஏக்கருக்கு 450 பல்புகள் தேவைப்படுவதாக கூறுகின்றனர். மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை பல்புகளை எரிய விடுகின்றனர்.