பாரதியார் பல்கலை., ஐ.சி.சி.ஆர் இணைப்பு மூலம் ரூ.1.5 கோடி வருவாய்
கோவை, அக். 30: கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஐசிசிஆர் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பாரதியார் பல்கலைக்கழத்தை, சர்வதேச கல்வி முன்னேற்றத்திற்காக இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) தெற்கு மண்டல தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார். அப்போது பல்கலைக்கழகத்தின் நவீன வசதிகள், அறிவியல் கட்டமைப்பு மற்றும் கல்வி சூழலை பாராட்டினார்.
மேலும், உயர் கல்வித்துறை செயலர் சங்கர், வழிகாட்டுதல் காரணமாகவும், சர்வதேச விவகார மையம் (சிஐஏ) மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாகவும் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைகளின் மூலம், பாரதியார் பல்கலைக்கழகம் மொத்தம் ரூ.1.5 கோடி வருவாயை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார். இதில், முதல் கட்டமாக ரூ.50 லட்சம் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிஐஏ இணைப்பாளர் நாகராஜ், துணை இணைப்பாளர்கள் சதாசிவம், பரணி, விஜயன், அருள்சாமி மற்றும் அஷிதா வர்கீஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பை பாராட்டினார். மேலும், பதிவாளர் ராஜவேல், துணைவேந்தர் குழு உறுப்பினர் துர்காசங்கர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களின் தொடர்ந்து வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.