50 இடங்களில் மஞ்சள் பை மெசின்
கோவை, ஆக.27: தமிழகத்தில் பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் தடை செயப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறையவில்லை. பல இடங்களில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக கிடைத்தும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பெயரளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து வணிக பகுதிகளிலும் துணிப்பைகள் கிடைக்க செய்ய வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக் பயன்பாடு படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தனியார் நிறுவனம் மூலமாக மஞ்சள் பை வழங்கும் மெசின்களை வைத்தும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் கேரி பேக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க முயன்றனர். தற்போது மாநில அளவில் முதல் கட்டமாக 50 மஞ்சள் பை வெண்டிங் மெசின் வாங்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்கள், மார்க்கெட், வணிக வளாக பகுதிகளில் மஞ்சள் பை மெசின் வைத்து 5 ரூபாய், 10 ரூபாய்க்கு மஞ்சள் பை கிடைக்க வழிவகை செய்யப்படவுள்ளது.