ஊட்டியில் கால்டாக்சி ஒட்டுநர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, நவ.22: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று முன் தினம் தங்கவேல் என்ற கால் டாக்சி டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவ்வமைப்பின் செயலாளர் ஹரிகரன் கூறியதாவது, “ஊட்டியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தனியார் செயலிகள் மூலம் வாடகைக்கு கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் கால் டாக்சி ஓட்டுநர்கள், திரும்ப வரும்போது அங்கிருந்து வாடகை பதிவு எடுக்க கூடாது என இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓட்டுநர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகள் இரு தரப்பு கால் டாக்சி ஓட்டுநர்களையும் அழைத்து பேசி, சுமூக தீர்வு காண வேண்டும். தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.