ஏட்டு மீது தாக்குதல் நடத்திய கோவை வாலிபர் கைது
கோவை, நவ.22: சேலம் வீராணம் அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய் 3வது வேகத்தடை பகுதியில் நேற்று முன்தினம் டூவீலரில் சென்று கொண்டிருந்த தர்மபுரியை சேர்ந்த வேடியப்பன் என்பவர் மீது லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்நேரம் மோதிய லாரியும் கவிழ்ந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற வீராணம் போலீசார் போக்குவரத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது தடையை மீறி அந்த பகுதியில் கார் ஒன்று வந்துள்ளது. இதனால் போலீசார் அந்த காரை நிறுத்தி, தடையை மீறி எதற்காக வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது காரில் இருந்த நபர் ஏட்டுவிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் காருக்குள் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் போலீஸ் ஏட்டுவும் செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது ஏட்டு மீது அந்த நபர் தாக்குதல் நடத்தினார்.
இதில் ஏட்டுவின் காது அருகில் காயம் ஏற்பட்டதுடன் சட்டையின் பட்டனும் அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், ஏட்டுவை தாக்கியவரை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா(27) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.