விபத்தில் மரணம் ஏற்படுத்திய வழக்கில் வேன் ஓட்டுனருக்கு 2 ஆண்டு சிறை
சூலூர், நவ.21: சூலூர் அருகே விபத்து ஏற்படுத்தி முதியவர் உயிரிழக்க காரணமான வழக்கில் வேன் ஓட்டுனருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூலூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம் சூலூர் வேலப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் முருகேசன் (63). இவர் கடந்த 2023ம் ஆண்டுவடவள்ளி பகுதியில் அருகில் இருந்த டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இவருக்கு வலது கால் சற்று ஊனமாக இருந்த காரணத்தினால் தடி ஊன்றிக்கொண்டு சாலையை கடந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சீட் வேன் முருகேசன் மீது பயங்கரமாக மோதியது. இதில், காயம்பட்ட முருகேசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வேனை ஒட்டி வந்த வேலப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓட்டுனர் ரங்கநாதன் (39) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் நேற்று தீர்ப்பளித்தார். வேனை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து உயிரிழப்பு ஏற்பட காரணமான ஓட்டுனர் ரங்கநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அருண்குமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு உதவி வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி, ஓட்டுனருக்கு தண்டனை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.