மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு மாநகராட்சி வார்டு குழு கூட்டத்தில் கண்டனம்
கோவை, நவ. 19: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு குழு கூட்டம் மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் குமார் பேசியதாவது: கோவைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்து இருக்கின்றது. 20 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள கோவைக்கு அனுமதி கொடுக்க இயலாது என்ற காரணங்களை சொல்லி நிராகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆனால் கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்து இருப்பதை தெரிந்திருந்தும் நிராகரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அவசரக் கதியில் செயல்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்தப்படும் எஸ்ஐஆர் திட்டத்தின் பணிகளுக்கு வருவாய் துறை மற்றும் ஒட்டுமொத்த மாநகராட்சி அதிகாரிகளை பயன்படுத்துவதால் அடிப்படை வேலைகள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே கால அவகாசம் கொடுத்தும், அதில் இருக்கின்ற குளறுபடிகளை களைந்தும் எளிமையான நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். விளாங்குறிச்சி முதல் தண்ணீர் பந்தல் வழியாக கொடிசியா செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் பாதையாக இருப்பதால் இந்த பிரதான சாலையை உடனடியாக தார் சாலை அமைத்து சீர் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.