ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
கோவை, நவ. 19: நாடு முழுவதும் ஒன்றிய பாஜ ஆட்சியில் அதிகரித்து வரும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சிவசாமி கூறியதாவது, ‘‘பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து பல்வேறு அடக்கமுறைகளை கையாளப்பட்டு வருகின்றன. ஒன்றிய பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் சொந்த நாட்டிலேயே அகதிகள்போல அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாஜ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனை கண்டிக்கும் வகையிலும், மத நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்கிற வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’ இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தங்கவேல், ஜேம்ஸ், பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.