கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை
பெ.நா.பாளையம், நவ.18: கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகர், பாலாஜி கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கடந்த 15 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். உள்ளே இருந்த பீரோ பூட்டையும் உடைத்து சில்வர் பொருட்கள் மற்றும் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பினர். அதேபோல கவுண்டம்பாளையம் ராஜன் நகர் 1-வது தெருவில் ஸ்டான்லி (48) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார்.
அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் 20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பி விட்டனர். இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கொள்ளை நடந்த வீட்டுக்குள் கிடைத்த கைரேகை பதிவுகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளான இரண்டு இடங்களிலும் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.