தூய்மை பணியாளர்களுக்கு இன்று சிறப்பு மருத்துவ முகாம்
கோவை, செப். 18: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்குகிறது. இந்த முகாம் (ஞாயிற்றுக்கிழமை தவிர) 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வார்டு வாரியாக வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடக்கும். இதில், ரத்த பரிசோதனை, கண், பல், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும்.
முதல் நாளான இன்று சிடிஎம்ஹோம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் நடைபெறும் முகாமில், 67, 68, 48 வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும், ரத்தினபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் முகாமில் 31, 46, 47 வார்டு தூய்மை பணியாளர்களும், ஜெயில் ரோடு சுகாதார நிலைய முகாமில் 83, 67, 49 வார்டு தூய்மை பணியாளர்கள் கலந்து கொள்ளலாம். இதேபோல், நாளை விவிஎம், ராஜ வீதி, செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முகாம் நடக்க உள்ளது.