மாநகராட்சி திட்டங்களை கேட்டறிந்த ஜெர்மனி மாணவர்கள்
கோவை, செப். 10: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று நேரில் சந்தித்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். கோவை தனியார் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த மாணவர்களை 2025ம் ஆண்டுக்கான இந்திய வெளிநாட்டுப் படிப்பு திட்டத்தை அறிய ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கலாசாரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் வணிக நடைமுறைகள் பற்றிய வெளிப்பாட்டை வழங்குவதற்கும், நாட்டின் பல்வேறு மரபுகள், மொழிகள் மற்றும் விழாக்களில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும், பாரம்பரியம் மற்றும் சமூக மதிப்புகள் பற்றிய வளமான புரிதலை வளர்ப்பதற்கும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக ஜெர்மனியை சேர்ந்த மாணவர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மாநகராட்சியின் நிர்வாகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தனர். முன்னதாக, மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம், பெரியகுளம் மற்றும் கிருஷ்ணம்பதி குளம் ஆகிய குளங்களையும் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.