கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்
கோவை,ஆக.7: கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வாயில் முழக்க போராட்டம் நடந்தது.மண்டல செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கிளை துணை தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.இதில், செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முறையற்ற முறையில் நியமனம் செய்த மாற்று பணி ஆசிரியர்கள் ஆணையை ரத்து செய்ய வேண்டும். அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 100 முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
யுஜிசி வழிகாட்டுதலின் படி கல்லூரி ஆசிரியர்களில் ஓய்வு பெறும் வயதினை 65ஆக உயர்த்த வேண்டும். இடமாறுதல் பொதுகலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களின் கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேராசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.