11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் விநியோகம்
கோவை, ஆக. 7: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இதில், கோவை மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வை 366 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 36 ஆயிரத்து 82 மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 தேர்வை 35 ஆயிரத்து 37 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்நிலையில், இத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
இதனை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் சான்றிதழ்கள் கோவை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கவுண்டம்பாளையம் அரசு உதவி தேர்வு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.