ரேஷன் அரிசி முறைகேடு; விற்பனையாளர் சஸ்பெண்ட்
கோவை, ஆக.7: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் முறைகேடாக தனி நபர்களுக்கு அரிசி விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. இது தொடர்பாக கூட்டுறவு சங்க சார் பதிவாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் முறைகேடாக அரிசி கையாண்ட விற்பனையாளர் சாந்தாமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் பணியாற்றிய கடைகளில் உணவு பொருட்கள் வினியோகம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அரிசி,பருப்பு போன்றவை பயோ மெட்ரிக் பதிவு அடிப்படையில் பாயிண்ட் ஆப் சேல் கருவி மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. துல்லியமான எடையில் இருந்தால் தான் உணவு பொருட்கள் பெற முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் அல்லாத பிறர் முறைகேடாக ரேஷன் பொருட்கள் பெற முடியாத நிலைமை இருக்கிறது.
இப்படி இருக்க சாந்தாமணி எப்படி ரேஷன் பொருட்களை முறைகேடாக வழங்கினார். எவ்வளவு உணவு தானியங்கள் கணக்கில் காட்டாமல் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடையில் இருந்த ரேஷன் பொருட்களை விற்பனையாளர் மோசடியாக வழங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.