அன்னூர் பேரூராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து மக்கள் போராட்டம்
அன்னூர், ஆக.6: அன்னூர் பேரூராட்சியில் 5-வது வார்டில், சத்தி ரோட்டில் சில வீடுகளில் கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருவதாக கடந்த இரு வாரங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டபொம்மன் நகரில் மின் மோட்டார் பழுதானதால் 15 நாட்களாக போர்வெல் நீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி, நேற்று மாலை சத்தி ரோடு பகுதியில், பொது மக்கள் கவுன்சிலர் மணிகண்டனுடன் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சுகாதார அலுவலர் ராஜ்குமார், எழுத்தர் அருண்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பலமுறை புகார் தெரிவித்தும் கழிவுநீர் கலப்பதை சரி செய்யவில்லை. மேலும் மின்மோட்டார் பழுதாகி இரு வாரமாகி விட்டது. ஆனாலும் சரி செய்யவில்லை’’ என்றனர். இதையடுத்து உடனடியாக மின்மோட்டார் சரி செய்யப்படும் கழிவுநீர் கலப்பது 24 மணி நேரத்திற்குள் தடுத்து நிறுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஒன்றரை மணி நேர காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.