கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு கைவரிசை
கோவை, ஆக 6: கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர்கள் அறைக்குள் புகுந்து செல்போன், லேப்டாப்பை பறித்து தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் ஆதித்ய நாராயணன் (18). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அறையில், நண்பர்கள் ஹரி பெருமாள், ஸ்ரீஹரி ஆகியோரும் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அனைவரும் அறையில் படித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் திடீரென அறைக்குள் புகுந்தனர்.
4 பேரும் சேர்ந்து ஆதித்ய நாராயணன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி 3 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த ஆதித்ய நாராயணன் மற்றும் நண்பர்கள் அக்கும்பலை விரட்டி சென்றனர். அதற்கு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ஆதித்ய நாராயணன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.