கஞ்சிக்கோடு அருகே தமிழக அரசு பஸ்சில் தீ
பாலக்காடு, நவ. 5: பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்சின் டயர் பஞ்சரானதை தொடர்ந்து தீப்பரவி புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது கஞ்சிக்கோடு ஐடிஐ நிறுத்தம் அருகே திடீரென பஸ் டயர் பஞ்சராகியது.
தொடர்ந்து, பஸ்சிற்கு அடியிலிருந்து புகை கிளம்பியது. இதனை கவனித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு பயணிகளை உடனடியாக கீழே இறக்கிவிட்டார். தொடர்ந்து தீயை அணைக்க முயற்சித்தனர். பின்னர் இந்த தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி பயணித்த பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.