காலி மதுபாட்டில்களை வாங்க மறுத்து டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை,அக்.4: பொது இடங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதை தவிர்க்கும் வகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அந்த பாட்டில்களை திரும்ப தரும்போது ரூ.10 திரும்ப தரப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி காலி மதுபாட்டில்களை வாங்கமாட்டோம் எனக்கூறி, கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கிடங்கு அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது, ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினால் கூடுதல் பணிசுமை ஏற்படுகிறது.
அதனால் மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம். காலி பாட்டில்களை வாங்க மாட்டோம்.டாஸ்மாக் நிர்வாகமே ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.