கள்ளிமடை பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
கோவை: கோவையை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் நேற்று இரவு தனது காரை நிறுத்தியிருந்தார். பின்னர் அவர் அங்கேயிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் காரில் இருந்து புகை வந்தது. அடுத்த சில நிமிடத்தில் தீ பிடித்து வேகமாக எரிந்தது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் அங்கே சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் தீ கார் முழுவதும் பரவி விட்டது. இதில் கார் எரிந்து நாசமாகி விட்டது. காரில் மின் ஒயர் பழுது காரணமாக தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் விரைவாக செயல்பட்டதால் அக்கம் பக்கத்து வாகனங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காரில் தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.