ரயில்வே காப்பர் கம்பிகள் திருடிய 4 பேர் கைது
கோவை, செப். 23:கோவையில் ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை திருடிய 4 பேரை ஆர்பிஎப் போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே, கடந்த 19ம் தேதி ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை சிலர் வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் அளித்த புகாரில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்தனர்.
மேலும், சம்பவ நாளில் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், பைக்கில் அங்கு வந்த 3 பேரில், ஒருவர் வெளியே ஆட்கள் வருகிறார்களா? என பார்க்க நிற்க, மற்ற இருவர் ரயில்வே பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த காப்பர் கேபிளை வெட்டி, 3 பேரும் பைக்கில் தப்பி செல்வது தெரியவந்தது.
அவர்களது அங்க அடையாளங்கள் மற்றும் வாகன பதிவெண் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், காப்பர் கம்பிகளை திருடி சென்றது புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(42), கோவை கணபதியை சேர்ந்த சதாசிவம்(46), சரவணம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த குமார்(49) மற்றும் அவர்களிடம் கம்பியை விலைக்கு வாங்கிய கேரளாவை சேர்ந்த ரதீஷ்(39) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3,500 மதிப்பிலான காப்பர் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.