மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கோதுமை நாகம் மீட்பு வனப்பகுதியில் விடுவிப்பு
மேட்டுப்பாளையம், செப்.22: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கொடிய விஷமுள்ள கோதுமை நாகம் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள சாமண்ணா நீருந்து நிலையம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக என்.டபிள்யூ.சி.டி நிறுவனர் ஒயிட் பாபுவுக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற ஒயிட் பாபு தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராடி சுமார் 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள அதே நேரத்தில் அரிய வகை பாம்பான கோதுமை நாகத்தை பத்திரமாக மீட்டார். பின்னர், அதனை மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் அறிவுறுத்தலின் பேரில் ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் பத்திரமாக ஒயிட் பாபு விடுவித்தார். சமீப காலமாக அரிய வகை கொடிய விஷமுள்ள கோதுமை நாகங்கள் மேட்டுப்பாளையம் பகுதிகளில் பிடிபடுவது குறிப்பிடத்தக்கது.