கொடுமுடி பேரூராட்சி தலைவர் தகுதி நீக்கம்
மொடக்குறிச்சி, ஜூலை 9: கொடுமுடி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்று தலைவர் நீக்கம் என அரசிதழில் வெளியிட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் முறையாக தகவல்கள் அனுப்பவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், 3வது வார்டு கவுன்சிலர் திலகவதி சுப்பிரமணியம் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பேரூராட்சித் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் நிர்வாகத்தில் தலையீடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பேரூராட்சி கவுன்சிலர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டி வந்தனர். இதைத்தொடர்ந்து 12 கவுன்சிலர்கள் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பேரூராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல்அலுவலர் தலைமையில் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவருக்கு எதிராக 12 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.