கிருஷ்ணராயபுரம் அருகே ராட்சத குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கிருஷ்ணராயபுரம், அக். 31: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்திலிருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் வழியாக மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதிக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
இதில் பழைய ஜெயங்கொண்டத்திலிருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாகிறது. இதனால் சேரும் சகதியுமாக உள்ளதால் இவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
