தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்கராயர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். மாநில செயலாளர் சென்னராஜ் துவக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் தனபால், குப்புசாமி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பெரியசாமி நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசுவரன் நன்றி கூறினார். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.