பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க வேண்டும்
க.பரமத்தி,ஆக. 20: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை கூட்டம் க.பரமத்தியில் நடைபெற்றது. செயலாளர் அன்புராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி மாவட்ட குழு முடிவுகள் கூறித்து பேசினார். உறுப்பினர்கள் ரவி, சௌந்தரராஜன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். க.பரமத்தி ஊராட்சி காவேரி நகர் முதல் தெருவில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.
க.பரமத்தி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் கிழக்கு, மேற்கு தெரு, ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். க.பரமத்தி கடைவீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் இருபுறமும் புதிய வடிகால் அமைக்கப்பட்டதில் கடைவீதி தென்புறம் நிழற்குடை அருகே ராஜபுரம் ரோடு பிரியும் இடத்தில் வடிகால் மேல் தளம் இடிந்து விழுந்து பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.