குளித்தலை சுங்ககேட் பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி: இலவச ஹெல்மெட்களை டிஎஸ்பி வழங்கினார்
குளித்தலை, ஆக.18: குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சுங்ககேட் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக ஹெல்மெட்களை வழங்கினார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்க கேட்டில் காவல் துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தலையில் அடிபட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், ஹெல்மெட் அணிவதால் 74 சதவீதம் தலைக்காயங்கள் ஏற்படாமல் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாகவும், எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அதுகுறித்து விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தினந்தோறும் இப்பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் ஹெல்மெட் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் இலவச ஹெல்மெட்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் பலரும் உடனிருந்தனர்.