கரூர் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு
கரூர், அக். 13: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம், வெங்கமேடு, வெள்ளியணை, வாங்கல், கருர் டவுன், பசுபதிபாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த வேலுசாமி, பாபு, ரஞ்சித்குமார், அம்சவேணி, மங்களம், சக்திவேல் 6 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 550 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.