கரூர்-ராயனூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கரூர், செப். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் சாலையில் கனரக வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூர் மாநகர பகுதிகளில் இருந்து ராயனூர், திண்டுக்கல், திருச்சி மற்றும் மதுரை பைபாஸ் சாலைகள், கோடங்கிப்பட்டி, ஈசநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமாநிலையூர், ராயனூர் வழியாக சென்று வருகிறது.
இந்த சாலையில் திருமாநிலையூர் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து எளிதாக நடைபெறாமல் அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டு வரும் சூழல் உள்ளது.
இந்நிலையில், குறுகிய சாலையில், ஒரு சில கனரக வாகனங்கள் வந்து செல்வதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற நிகழ்வுகளை பார்வையிட்டு, மற்ற வாகன போக்குவரத்துக்கு இடையூறு இன்றி கனரக வாகனங்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுகக் வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.