புன்னம் பசுபதிபாளையம் அனுமந்தராய பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி
க.பரமத்தி, அக்.12: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோவில் புரட்டாசி 4வது சனிக்கிழமையொட்டி நேற்று காலை சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் பூஜையும், சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமையொட்டி அனுமந்தராயசாமிக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெண்ணை சாற்றி, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம், வெற்றிலை, துளசி, ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.