ஆரியூர் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர்
க.பரமத்தி, அக்.12: ஆரியூர் அருகே குஞ்சாம்பட்டி பிரிவு பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு கடந்த 2003ம் ஆண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.5 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நொய்யல் அடுத்த மறவாப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து குழாய் மூலம் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 564 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் செல்லும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழித்தடங்களான ஆரியூர் பகுதியில் இருந்து எல்லமேடு செல்லும் வழியில் குஞ்சாம்பட்டிபிரிவு பகுதியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்காததால் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஓடுகிறது.
இதனால் க.பரமத்தி ஒன்றிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. இதனால் தினமும் பல லட்சம் லிட்டர்குடிநீர் வீணாகி வருகிறது. இவ்வாறு குடிநீர் வீணாக செல்வதால் க.பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.