குளித்தலை அரசு கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
குளித்தலை, ஜூலை 7: கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி சட்டமன்றப் பொன்விழா தமிழாய்வுத் துறை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து கல்லூரி வளாகத்தில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கியது. புத்தக கண்காட்சியைக் கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா தொடங்கி வைத்து பேசும்போது, ‘பூமி வசிப்பதற்கு மட்டுமல்ல வாசிப்பதற்கும் உரியது.
புத்தகத்திற்குச் சமூகத்தை மாற்றியமைக்கும் ஆற்றலுண்டு. ஆகவே உலகை வெல்லக் கருதும் மாணவர்கள் சமூகம், கலாச்சாரம், பண்பாடு ,கலை , அறிவியல் சார்ந்த நூல்களை வாசித்தல் வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியைத் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஜெகதீசன் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்த் துறைப் பேராசிரியர் வைரமூர்த்தி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இன்றும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.